வணிகம்
உணவு டெலிவரி, ஆன்லைன் கல்வி சேவையை தொடர்ந்து விநியோக சேவையை நிறுத்தும் அமேசான்.. என்ன காரணம்?

உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில், இ-காமர்ஸ் உடன் உணவு டெலிவரி, ஆன்லைன் கல்வி சேவை, அமேசான் பிரைம் வீடியோ சேவை, அமேசான் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.
சென்ற வாரம் இந்தியாவில் உணவு மற்றும் ஆன்லைன் கல்வி சேவையை நிறுத்துவதாக அமேசான் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த வாரம் அமேசான் விநியோக சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அமேசான் விநியோக சேவைகளின் கீழ், பெங்களூரு, மைசூரு, ஹூப்ளி உள்ளிட்ட நகரங்களில் 50 ஊழியர்கள் உதவியுடன் சில்லறை விற்பனை கடைகளுக்குப் பொருட்களை விநியோகம் செய்யும் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விநியோக சேவையை அமேசான் நிறுத்தினால் இந்த 50 ஊழியர்களின் வேலை பறிபோக அதிக வாய்ப்புள்ளது.
இப்படி தொடர்ந்து பல சேவைகளை நிறுத்துவதன் மூலம் தங்களது முதன்மையான வணிகங்களில் மட்டும் கவனம் செலுத்த முடியும். உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை வர அதிகம் வாய்ப்புகள் உள்ளதாக கணிக்கப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட வணிகங்களிலிருந்து விலகி இருக்க அமேசான் திட்டமிட்டுள்ளது.
உலகம் முழுவதும் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் அமேசான் திட்டமிட்டுள்ளது.
ஊழியர்கள் தேவையில்லாமல் ஏசி, டிவி, குளிர்சாதனப் பெட்டி கார் போன்ற செலவுகளைச் செய்ய வேண்டாம். பொருளாதார மந்த நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அமேசான் தலைமை நிர்வாக இயக்குநர் ஜெஃப் பிசோஸ் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.