சினிமா
ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் நடிப்பு; தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம் இதோ!

இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தலைப்புக் கூட விடாமல் தமிழில் ரீமேக் செய்துள்ளனர்.
நிமிஷா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட நடிகர்கள் மலையாளத்தில் நடித்திருந்த நிலையில், தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாடகி சின்மயின் கணவரும் நடிகருமான ராகுல் ரவீந்தர், மாமனாராக நந்தகுமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட சில நடிகர்களே நடித்துள்ள படம் தான் இந்த தி கிரேட் இந்தியன் கிச்சன்.

#image_title
மலையாள படத்தை பார்த்தவர்களுக்கு கதை என்ன என்பது தெரிந்திருக்கும். தமிழில் அதே அளவுக்கு காரத்தோடு உருவாக்க வேண்டும் என முயன்றுள்ளனர். ஆனால், அது எந்தளவுக்கு கை கொடுத்தது என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து ஏகப்பட்ட உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்துத் தள்ளி வருகிறார். முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு அதிகமாக கிடைக்காத நிலையில், தனது ரூட்டை இப்படி மாற்றிக் கொண்டார்.
டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் படங்களை தொடர்ந்து கடந்த 2 மாதங்களில் மூன்றாவது படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தையும் ரிலீஸ் செய்துள்ளார்.

#image_title
பெண்கள் எல்லாம் ஹோம் மினிஸ்டர்ஸ்னு சொல்லியே வீட்டில் அடைத்து வைக்கும் பிற்போக்குத்தனம் நிறைந்த குடும்பத்தில் ராகுல் ரவீந்திரனுக்கு மனைவியாக வந்து சிக்கிக் கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கணவருக்கு பிடித்த மாதிரி ஒரு உணவு, மாமனாருக்கு பிடித்த மாதிரி ஒரு உணவு என சமையல் கட்டிலேயே பெண்களின் வாழ்க்கை எப்படி வீணாகிறது என்பதை எடுத்துக் காட்டும் படம் இது. மாமியாரை பார்த்து உங்களுக்கு என்ன பிடிக்கும் என கேட்க, ருசியறியாமல் நாக்கே செத்துப் போச்சுன்னு சொல்கிற இடம் பல பெண்களை கண்ணீர் வரவழைத்தாலும், ஆணாதிக்கத்தை மட்டுமே விளாச வேண்டும் என்கிற ரீதியில் மாமியார் கொடுமையை மறைத்து விட்டனர்.
ரேஷன் கார்டில் குடும்பத் தலைவராக ஏன் ஆணும் பெண்ணும் இருக்கக் கூடாது என வெகுளியாக கேட்பது போல ஏகப்பட்ட கேள்விகளை ஐஸ்வர்யா ராஜேஷ் சமூகத்தின் முன் எழுப்புகிறார். கணவர் தொல்லையை விட மாமானார் செய்யும் தொல்லைகள் மேலும், அவரை எரிச்சலூட்டுகிறது. துணியை வாஷிங் மெஷின்ல துவைக்காத, விறகு அடுப்புல சோறு பொங்குனா தான் ருசியா இருக்கும் என இஷ்டத்துக்கு மாமனார் படுத்தும் பாடு இருக்கே மண்டையிலேயே ஒண்ணு வைக்கலாம்னு தோணுது.

#image_title
தனக்குள் இருக்கும் நடன ஆசிரியரை புதைத்து விட்டு புகுந்த வீட்டில் சமையல் கட்டில் கொடுக்கும் டார்ச்சரை தாங்க முடியாமல் வெடித்து சிதறி தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ நாயகி செல்வது தான் இந்த தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம்.
தொடர்ந்து பெண்களுக்கான கதைகள் வெளியாகி வருவது பாசிட்டிவ் ஆன விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், கடைசி வரை காய்கறி நறுக்குவதும், சோறு பொங்குவதையும் தியேட்டரில் சென்று பார்க்கும் ரசிகர்கள் பாதியிலேயே பசியெடுக்க வீட்டுக்கே கிளம்பி விடும் அளவுக்கு படம் டெத் ஸ்லோவாக நகர்வது மைனஸ் ஆக மாறி உள்ளது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் ரேட்டிங்: 3/5.








