தமிழ்நாடு
அமமுக பழனியப்பனிடன் டீல் பேசிய ஸ்டாலின் மருமகன் சபரீசன்: சிக்கிய ஆடியோ!

அமமுக முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியுள்ளன. தங்க தமிழ்செல்வனை தங்கள் பக்கம் இழுக்க இந்த இரு கட்சிகளும் முயற்சி செய்தது. ஆனால் தங்க தமிழ்செல்வன் அதிமுக பக்கம் செல்ல முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் மற்றொரு அமமுக முக்கிய நிர்வாகியான முன்னாள் அமைச்சர் பழனியப்பனை அதிமுகவுக்கு இழுக்க அமைச்சர் வேலுமணி முயன்று வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் திமுக தரப்பும் பழனியப்பனை நாடி அவரிடம் டீல் பேசியதாக ஆடியோ ஒன்று சிக்கியுள்ளது. இந்த ஆடியோ தங்க தமிழ் செல்வன் ஆடியோ போல வெளியில் பெரிதாக பரவாமல் அமமுக வட்டாரத்தில் வலம் வருவதாக கூறப்படுகிறது.
அமமுக முக்கிய நிர்வாகியான பழனியப்பனிடம், செந்தில் பாலாஜியும், சபரீசனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அந்த பேச்சுவார்த்தை பழனியப்பன் செல்போனில் பதிவாகியிருப்பதாக கூறப்படுகிறது. அதில், நீங்கள் திமுகவுக்கு வாருங்கள். நீங்கள் சொல்பவருக்கு அல்லது உங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கிறோம். உங்கள் மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளை உங்களிடம் ஒப்படைக்கிறோம். அதற்கு நீங்களே வேட்பாளர்களைத் தேர்வுசெய்து, தேர்தல் செலவுகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தங்க தமிழ்செல்வன் விவகாரத்தை போல இதுவும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.













