இந்தியா
மோடியை நிம்மதியாக தூங்க விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்!

மோடி அரசு நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை மோடியை நிம்மதியாக தூங்க விடமாட்டோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்த மாநில தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அந்த மாநிலங்களில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது பேசிய அவர், நாங்கள் ஆட்சிக்கு வந்த 6 மணி நேரத்தில் இரண்டு மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளோம். விரைவில் மூன்றாவது மாநிலத்திலும் தள்ளுபடி செய்யப்படும். நாங்கள் ஆட்சிக்கு வரும் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம். கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிலதிபர்களின் ரூ.3.5 லட்சம் கோடி ரூபாய் கடனைத் தள்ளுபடி செய்த பிரதமர் மோடி விவசாயிகள் பெற்ற கடனில் ஒரு ரூபாய்கூட தள்ளுபடி செய்யவில்லை.
பணமதிப்பழிப்பு நடைமுறை என்பது உலகின் மிகப் பெரிய ஊழல். அதன் நோக்கமே ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கி பணக்காரர்களுக்குக் கொடுப்பதுதான். மோடி அரசு நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் வரை அவரை நிம்மதியாக ஓய்வெடுக்கவோ, தூங்கவோ விட மாட்டோம் என்றார் ராகுல் காந்தி.





















