இந்தியா
கண் தெரியாத 15 வயது சிறுமிக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கைகொடுத்த தற்காப்புக்கலை!

மும்பையில் ஓடும் ரயிலில் இளைஞர் ஒருவர் 15 வயது கண் தெரியாத சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி அவரை கராத்தே மூலம் அடித்து வீழ்த்தி போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பலரையும் வியப்படைய வைத்துள்ளது.
மும்பை தாதர் பகுதியிலிருந்து கல்யாண் பகுதிக்கு செல்ல டிக்கெட் எடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான கம்பார்ட்மெண்டில் 15 வயதான கண் தெரியாத சிறுமியும் அவரது தந்தையும் ஏறியுள்ளனர். இவர்களுக்கு பின்னால் மாற்றுத்திறனாளியில்லாத 24 வயதுள்ள இளைஞன் ஒருவன் ஏறியுள்ளான். அந்த இளைஞன் ரயில் நகர தொடங்கியதும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தகாத இடங்களில் தொட முயற்சி செய்துள்ளான்.
இதனையடுத்து அந்த சிறுமி அனைவரும் கேட்கும்படி அந்த இளைஞன் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை கூறியுள்ளார். இதனையடுத்து அந்த இளைஞன் அங்கிருந்து செல்ல முயற்சித்ததும் அந்த சிறுமி அந்த இளைஞனை அடித்து கீழே வீழ்த்தி அடுத்த ஸ்டேசன் வரும் வரை விடாமல் பிடித்து வைத்துள்ளார்.
இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, டிக்கெட் இல்லாமல் பயணித்தது என இரண்டு வழக்குகள் அந்த இளைஞன் மீது பதிவு செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்த போலீசார், பாதிக்கப்பட்ட சிறுமி தைரியமாக செயல்பட்டார். அவர் கற்று வைத்திருந்த கராத்தே தற்காப்புக்கலை அவருக்கு உதவியாக இருந்தது. அனைத்து பெண்களும் இது போன்ற தற்காப்பு கலைகளை கற்க வேண்டும் என்றனர்.


















