இந்தியா
மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

மணி மியூல் அல்லது பணக் கழுதை என்ற புதிய வகை மோசடியைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
மோசடியாக மற்றும் சட்ட விரோத வழிகளில் பெறப்பட்ட பணத்தை அடுத்தவரின் வங்கிக் கணக்குகளின் மூலம் பெற்று வேறு கணக்குகளுக்கு மாற்றித் தரும் நபர்தான் இந்த மணி மியூல்.
இதுபோன்ற மணி மியூல்கள் 800 பேரை கடந்த சில நாள்களில் தமிழ்நாடு அரசு காவல்துறை கைது செய்துள்ளது. இந்த செயலில் ஈடுபடுபவர்கள் தெரிந்தே அல்லது ஏமாந்து இதில் பங்குதாரராக மாறி சீரழிகின்றனர்.
மணி மியூல் எப்படி செயல்படுகிறது?
சமூக வலைதளங்கள் மூலம் வரும் வீட்டிலிருந்தே சம்பாதிக்க சுலபமான வழிகள் என வரும் விளம்பரங்களை நம்பி அவர்களை தொடர்பு கொள்ளக் கூடிய ஏழை எளிய மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நடுத்தர வர்க்கத்தினர்தான் அவர்களின் டார்கெட்.
அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பியவர்களை நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம் உங்கள் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தால் அந்த கணக்கின் விவரங்களை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள். நாங்கள் எங்கள் கம்பெனியின் வரவு செலவுகளை உங்கள் கணக்குகள் வழியாக கொஞ்ச காலம் செய்து விட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கை உங்களிடமே கொடுத்து விடுவோம். அதற்காக மொத்தமாக ஒரு தொகை வழங்கப்படும். மாதாமாதம் ஒரு தொகையும் வழங்கப்படும். நீங்கள் எந்த வேலையும் செய்யாமலேயே உங்களுக்கு வரும் இந்த பண வாய்ப்புக்களை வேண்டாம் என்று யார்தான் சொல்வார்கள். சரி என்று சொல்லி விவரங்களை கொடுத்து விட்டு அவர்கள் தரும் பணத்தை வைத்து தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
இவ்வாறு வங்கி விவரங்களை பெறுபவர்கள் இணைய வழி மோசடி குற்றங்கள், சட்டவிரோத பணபரிமாற்றங்கள் ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக இருப்பார்கள். அவர்கள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வரும் பணத்தை இந்த வங்கி கணக்கில் பெற்று பின்னர் வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுவார்கள்.
பொருளாதார குற்றங்கள் புலனாய்வுத் துறை சைபர் கிரைம் மோசடி தடுப்புக் குழுவினர் நடைபெற்ற சட்ட விரோத பண பரிமாற்றங்களுக்காக இந்த வங்கிக் கணக்குக்கு உரியவரை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள். இவ்வகை குற்றத்திற்கு 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
இம்மாதிரி வங்கி கணக்குக்கு உரியவர்களே மணி மியூல்கள் என அழைக்கப்படுகின்றனர்.
இதில் சிக்காமல் இருப்பது எப்படி?
யார் எந்த காரணத்திற்காக வங்கி கணக்கு விவரங்களை கேட்டாலும் என்ன ஏது என்று விசாரிக்காமல் விவரங்களை தராமலிருப்பதே புத்திசாலித்தனம். உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்து தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
வருமானம் வேண்டுமென்றால் உழைத்து சம்பாதிக்க வேண்டும். ஓசியில் பணம் வேண்டுமென்றால் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். மக்களே உஷார்.












