தமிழ்நாடு
சுயேட்சை எம்.எல்.ஏக்கள் சமரசம்: புதுவையில் முடிந்தது அரசியல் பரபரப்பு!

புதுவை மாநிலத்தில் பாஜக, என்ஆர் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளித்த 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் வாபஸ் வாங்குவதாக சபாநாயகரிடம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த மூன்று சுயேச்சை எம்எல்ஏ க்களும் சமரசம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுவை முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது என்பதும் இந்த ஆட்சிக்கு 6 சுயேச்சை எம் எல் ஏக்கள் ஆதரவு தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீரென மூன்று சுயேச்சை எம் எல் ஏக்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மூன்று சுயேச்சை எம் எல் ஏக்கள் இன்று சட்டமன்றத்துக்கு வந்து தாங்களாக முன்வந்து தான் பாஜகவுக்கு ஆதரவு அளித்தோம் என்றும் ஆனால் மக்கள் எதிர்பார்க்கும் எந்த பணியும் புதுச்சேரி அரசிடம் நடைபெறவில்லை என்றும் இது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது என்றும் இதுகுறித்து பலமுறை அரசிடம் பயனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட முடிவு செய்திருப்பதாகவும் தங்கள் அதிருப்திகளையும், குறைகளையும் விரைவில் இந்த அரசு நீக்க வேண்டும் என்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் கேட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்த மூன்று சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தற்போது சமரசம் ஆகி விட்டதை அடுத்து புதுவையில் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.


















