சினிமா
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்!

ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன் சார்பில் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட் மற்றும் நர்சிராம் செளத்ரி தயாரித்திருக்கும் ‘ஆகஸ்ட் 16,1947’ திரைப்படத்தை பொன்குமார் இயக்கி இருக்கிறார். கெளதம் கார்த்தி, ரேவதி, புகழ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருப்பதை சிவகார்த்திகேயன் உறுதி செய்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “முதலில் நான் படம் பற்றி சொல்லி விடுகிறேன். இந்திய விடுதலை எனும்போது தனி மனிதர் ஒவ்வொருவருக்குமே சொல்ல முடியாத வலி இருக்கும். அப்படி இருக்கும்போது அடிமைப் பட்டு கிடந்த ஒரு நாடு எனும்போது அந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அதை பொன்குமார் கடின உழைப்பைக் கொடுத்து படமாக்கி இருக்கிறார். முதல் படமே பீரியட் படம் எனும்போது அதில் உங்கள் நம்பிக்கையும் தெரிகிறது.
கெளதம் கார்த்திக்கை முதலில் லண்டனில்தான் சந்தித்தேன். எனக்கும் கார்த்திக் சாரை பிடிக்கும். யாருடைய சாயலும் இல்லாமல் அவரது நடிப்பு தனித்துவமாக இருக்கும். திருமணத்திற்கு கெளதம் என்னை கூப்பிட்டு இருந்தார். அவருடைய திருமணத்தில் அனைத்து வேலைகளையும் அவரே எடுத்து செய்திருந்தது சிறப்பான விஷயம்.
நல்ல குணம் என்பதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அப்படியான ஒருவர்தான் கெளதம். அடுத்தடுத்தப் படங்கள் வர இருக்கிறது. வாழ்த்துகள். திருமணத்திற்கு பிறகு பலரின் வாழ்க்கையும் நல்ல விதமாக மாறும். எனக்கும் அப்படி நல்ல விஷயங்கள் நடந்தது. என்னைப் போலவே உங்களுக்கும் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. இன்று இங்கு நான் வர முக்கிய காரணம் முருகதாஸ் சார்தான்.
அவருடைய படங்களுக்கு பெரிய ரசிகன் நான். அவர் தயாரிப்பில் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு அவர் படங்களை தொகுத்து வழங்குவது, நிகழ்ச்சிக்கு ஸ்கிரிப்ட் எழுதித் தருவது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன். அடுத்து முக்கியமான ஒரு கட்டம் இருக்கிறது. அது சீக்கிரம் நடக்கும்” என பேசினார்.