இந்தியா
தலைமை நீதிபதி மீது பாலியல் புகார்: நீதித்துறை ஆபத்தில் உள்ளது!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது நீதித்துறையில் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் கோர்ட் அசிஸ்டெண்டாக பணியாற்றிய 35 வயது பெண் ஒருவர் நேற்று உச்ச நீதிமன்றத்தில் உள்ள 22 நீதிபதிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாக அந்தப் பெண் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 10 மற்றும் 11-ஆம் தேதி தலைமை நீதிபதியின் குடியிருப்பு அலுவலகத்தில் ரஞ்சன் கோகாய் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டார். அவர் என்னைக் கட்டிப்பிடித்து, கைகளால் அவருடைய உடலுடன் என்னை இணைத்து அழுத்திப் பிடித்தார். என்னைப் பிடித்துக்கொள் என்றும் என்னிடம் கூறினார். நான் அவரிடமிருந்து விலகிச் செல்ல முயற்சித்தேன் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக சிறப்பு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த அந்த பெண் கோரிக்கை வைத்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்ட இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். நீதித் துறையைச் சீர்குலைக்க மிகப்பெரிய சதி நடக்கிறது. என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. என் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது.
என்னிடம் இருந்து பணம் பறிக்க நினைத்து முடியாததால், பெண் ஊழியர் இதுபோன்ற புகாரை அளித்துள்ளார். சுதந்திரமாக பணியாற்றுவதால் இதுபோன்ற புகாருக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறேன். 20 வருட சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள என் மீதான புகார் நம்ப முடியாதவையாக உள்ளது. நீதித்துறை கடும் ஆபத்தில் உள்ளது, அடுத்த வாரம் சில முக்கிய வழக்குகளை கையாள இருக்கிறேன். அதனை தடுக்கும் முயற்சியாக இதனை பார்க்கிறேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறியுள்ளார். ரஃபேல் தொடர்பான வழக்கை ரஞ்சன் கோகாய் விசாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





















