சினிமா
எம்ஜிஆர் மனைவி வேடத்தில் பிக்பாஸ் நடிகை!

முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தை காமராஜ் என்ற பெயரில் தயாரித்து வெளியிட்ட ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை எம்ஜிஆர் என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இதில் எம்ஜிஆர் மனைவி ஜானகி அம்மாள் வேடத்தில் பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்.
ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார். இதில் எம்ஜிஆர் போன்று முகத்தோற்றம் உடைய பிரபல விளம்பர நடிகர் சதீஷ்குமார் எம்ஜிஆராக நடிக்கிறார். மேலும் எம்ஜிஆரின் உயிர் தொண்டராக பிக்பாஸ் பிரபலம் நடிகர் வையாபுரி நடிக்கின்றார்.
மேலும் முன்னாள் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா போன்ற முக்கியமான வேடங்களில் நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விரைவில் தொடங்கவுள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்ஜிஆரின் மனைவியாக பிக்பாஸ் வீட்டில் உள்ள நடிகை ரித்விகா நடிக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.















