சினிமா
தயாரிப்பாளர் ராஜன்: ‘படம் தயாரிப்பது போன்ற தண்டனை வேறு எதுவும் இல்லை!’

ஆர். கண்ணன் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. ‘மிர்ச்சி’ சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.
இதில் தயாரிப்பாளர் கே. ராஜன் பேசியதாவது, “இன்று தம்பி கண்ணன் நல்ல தயாரிப்பாளர், இயக்குநர். ஒருகாலத்தில் ராமநாராயணன் போல தொடர்ந்து படங்களை எடுத்துக்கொண்டே இருப்பார் இப்படி படங்கள் எடுக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். அப்படியானால் நான் படமே எடுக்க மாட்டேன், இயக்குவேன் என்று சொன்னார். நல்ல முடிவு. படம் தயாரிப்பது போன்ற ஒரு தண்டனை வேறு எதுவும் இல்லை. பாவம் செய்தவன் தான் படம் எடுக்க வருவான் என்பது புது மொழி. தயாரிப்பாளர்களை வாழ வைக்க சில நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாதது. இன்று எந்த படம் ஓடும் என்பது கணிக்க முடியாத ஒரு விஷயம். ஆனால் மக்கள் நல்ல படத்தை பார்க்கிறார்கள் என்பது மட்டும் உண்மை. ‘லவ் டுடே’ சமீபத்திய உதாரணம். இன்னும் மூன்று வருடத்திற்கு கண்ணன் படங்கள் திட்டமிட்டு கதைக்களத்தை உருவாக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். ஹீரோவை மனதில் வைத்து கதை உருவாக்கினால் நிச்சயம் தோல்விதான். அதனால், எதையும் திட்டமிட்டு செய்யுங்கள். படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். படத்தின் தலைப்பைப் போல படம் வெற்றியடைந்து பணம் கொட்ட வாழ்த்துகள்”.
நடிகர் சிவா பேசியதாவது, ” கண்ணன் சார் எனக்கு நீண்ட வருடமாகவே பழக்கம். லாக்டவுன் சமயத்தில் என்னை அழைத்து இந்த முறை படம் செய்தே ஆக வேண்டும் என்று சொன்னார். பெரிய படங்கள் எடுத்து அதை ரீமேக் செய்யும் பொழுது கண்டிப்பாக ஒப்பீடு இருக்கும் என்று தெரியும். அந்த பயத்தோடு தான் நாங்கள் இதனை எடுத்தோம். அந்தப் படத்தை விட சிறப்பாக யாராலும் எடுக்க முடியாது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவிற்கு நன்றாக கொடுத்திருக்கிறோம். யோகி பாபு சார், கருணாகரன் என இந்த படத்தில் நடித்த எங்கள் எல்லாருக்குமே இந்த டைட்டில் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. தயாரிப்பாளராக அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் இயக்குநராக கண்ணன் அவரது பணியை இனிமேல் சிறப்பாக செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க”.