சினிமா
STR48: ஜோடி சேரும் மூன்று கதாநாயகிகள்?

’பத்துதல’ படத்திற்கு அடுத்து நடிகர் சிலம்பரசனின் படத்தில் நடிக்க இருக்கும் கதாநாயகிகள் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்திருக்கக்கூடிய ‘பத்துதல’ திரைப்படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் கூட தனது ரசிகர்கள் இனிமேல் தன்னிடம் இருந்து நல்ல படங்களை எதிர்பார்க்கலாம் என சிலம்பரசன் சொல்லி இருந்தார். அந்த வகையில், ‘பத்துதல’ படத்திற்கு அடுத்து நடிகர் சிலம்பரசன் நடிக்க இருக்கும் 48வது படம் குறித்தான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ’ப்ளட் அண்ட் பேட்டில்’ என்ற டேக்கோடு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது.
இந்தக் கதையில் நடிகர் சிலம்பரசன் ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி கதையில் மூன்று கதாநாயகிகளை நடிக்க வைக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நடிகைகள் ராஷ்மிகா மந்தானா, பூஜா ஹெக்டே மற்றும் திஷா பட்டானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.