தமிழ்நாடு
நாளை முழு ஊரடங்கால், இன்றே மீன்வாங்க குவிந்த பொதுமக்கள்: கொரோனாவுக்கு கொண்டாட்டம்!

நாளை தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து இன்றே மீன் இறைச்சி வாங்குவதற்கு சந்தைகளில் பொதுமக்கள் தனிமனித இடைவெளி இன்றி குவிந்துள்ளதால் கொரோனாவுக்கு கொண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து திங்கள் முதல் சனி வரை இரவு நேரம் ஊரடங்கும், ஞாயிறு அன்று முழு நேர ஊரடங்கும், பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முழு ஊரடங்கு தினமான ஞாயிறன்று கடைகள் திறக்கவும் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை என்று கூறப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளான பால், பத்திரிகை ஆகியவற்றுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி நாளை முழு ஊரடங்கு தினத்தில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்படும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் நாளை மீன் கடைகள் திறந்திருக்குமா என்ற சந்தேகத்தில் இன்றே மீன்கள் வாங்க காசிமேட்டில் பொதுமக்கள் குவிந்து உள்ளனர். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் காசிமேடு மீன் சந்தையில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரு சிலர் முகக் கவசம் அணியாமல் மீன் வாங்க குவிந்துள்ளதால் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் பொதுமக்கள் தங்களை தாங்களே கட்டுப்படுத்திக்கொண்டு அரசின் முடிவுக்கு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்றும் தனிமனித இடைவெளியின்றி மீன் உள்பட இறைச்சி வாங்குவதற்கு கூட்டம் கூடினால் கொரோனாவுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.











