உலகம்
ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து திடீர் திடீரென வெளியேறும் உயரதிகாரிகள்.. என்ன நடக்குது?

கூகுள் உள்பட பல பெரிய நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையை கடந்து சில மாதங்களாக எடுத்து வரும் நிலையில் பணி நீக்க நடவடிக்கை எடுக்காத ஒரே பெரிய நிறுவனம் ஆப்பிள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீர் திடீரென அந்த நிறுவனத்திலிருந்து உயர் அதிகாரிகள் ராஜினாமா செய்து கொண்டிருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் தயாரித்து வருகிறது என்பதும் அது மட்டும் இன்றி பல மென்பொருள்களை தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2002 ஆம் ஆண்டின் ஜூன் மாதத்திற்கு பிறகு ஆப்பிள் நிறுவனத்திலிருந்து 10க்கும் மேற்பட்ட உயர் பதவியில் உள்ள நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு நிறுவனத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
தலைமை நிர்வாக அதிகாரி டிக் குக் அவர்களுக்கு கீழ் உள்ள பதவியில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றும் அவர்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு நாளின் செயல்பாட்டிற்கும் மிகவும் பொறுப்பான பதவிகளில் இருந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொழில்துறை வடிவமைப்பு, ஆன்லைன் ஸ்டோர், தகவல் அமைப்புகள், ஆப்பிளின் கிளவுட் முயற்சிகள், வன்பொருள் மற்றும் மென்பொருள் பொறியியலின் அம்சங்கள், தனியுரிமை விஷயங்கள், வளர்ந்து வரும் சந்தைகளில் விற்பனை, சந்தா சேவைகள் மற்றும் கொள்முதல் ஆகிய துறைகளில் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்றும் ராஜினாமா செய்ததற்கு என்ன காரணம் என்பதை குறித்து ஆப்பிள் நிறுவனம் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 12 மாத காலத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளை இழந்து உள்ளது என்றும் ஆனால் அதே நேரத்தில் அவர்கள் விருப்பப்பட்டு சென்றார்களா? அல்லது வெளியேற்றப்பட்டார்களா? அல்லது வேறு நிறுவனத்திற்கு அதிக சம்பளம் கிடைக்கிறது என்பதால் சென்றார்களா? என்பது குறித்த தகவல் நிச்சயமாக இன்னும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேறிய நிர்வாகிகளுக்கு பதிலாக மாற்று ஊழியர்களை பணியில் அமர்த்தும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் தற்போது உள்ளது என்றும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நல்ல அனுபவம் உள்ள அந்த ஊழியர்களுக்கு மாற்றாக ஊழியர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
உயர்நிலை ஊழியர்கள் மட்டுமின்றி கீழ்நிலையில் உள்ள ஊழியர்களும் சிலர் ராஜினாமா செய்து வருவதாகவும் ஊழியர்கள் ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை செய்து ஊழியர்களுக்கு மேலும் சில சலுகைகளையும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் வேலை பளுவை குறைக்கவும் ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.