தமிழ்நாடு
புதிய சட்டத்தை இயற்றுவோம், ஆளுநர் ஒப்புதல் தந்தாக வேண்டும்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அதிரடி!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் மீண்டும் இந்த சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவோம், அவர் ஒப்புதல் தந்தாக வேண்டும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

#image_title
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் பணத்தை இழந்து தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததையடுத்து, இந்த ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் சட்டமசோதாவை தமிழக சட்டசபையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு. ஆனால் இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாதங்கள் கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் நேற்று தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு சில கேள்விகளை ஆளுநர் கேட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து விட்டோம்.
ஆனால் இப்போதுதான் முதன் முறையாக மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். திருப்பி அனுப்பிய மசோதாவை நாங்கள் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் தந்துதான் ஆக வேண்டும் அதுதான் சட்டம். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க சட்டம் இயற்ற சட்டமன்றத்துக்கு உரிமை உண்டு என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. நீதிமன்றமே சொல்கிற போது, அதிகாரம் இல்லை என ஆளுநர் எந்த அடிப்படையில் இந்த சட்ட மசோதாவை திருப்பி அனுப்பினார் என புரியவில்லை என்று தெரிவித்தார்.