தமிழ்நாடு
ஆளுநருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுடன் கை கோர்க்கும் பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி!

தமிழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக ஆளும் தரப்பு தொடர்ந்து பல்வேறு கருத்து வேறுபாடுகளை கூறிவருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை ஆளுநர் கால வரையறை இன்றி கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக பொதுவான குற்றச்சாட்டும் உண்டு. மேலும் ஆளுநரின் கருத்துக்களும் தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தும்.

#image_title
இதனையடுத்து தமிழக ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க காலநிர்ணயம் வேண்டும் என ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்படும் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் மாநில ஆளுநர்கள் காலவரையறை இன்றி நிலுவையில் வைத்திருக்கின்றனர். இதனால் அந்தந்த மாநில செயல்பாடுகள் குறிப்பிட்ட இடங்களில் முடங்கிப் போய் இருக்கிறது. எனவே அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற கோரிக்கை வைத்திருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் இந்த கடிதத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்திருந்த நிலையில் தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆளுநர்களின் அத்துமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.