தமிழ்நாடு
உடனடியாக அரசிதழில் வெளியானது ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் பல்வேறு கண்டனங்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தமிழக அரசிதழில் வெளியாகி உள்ளது.

#image_title
முன்னதாக தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய இந்த மசோதாவை காலம் தாழ்த்தி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தமிழகத்தில் கடும் கண்டனங்களை எழுப்பின. இதனையடுத்து மீண்டும் இந்த மசோதாவை தமிழக அரசு சட்டசபையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றி மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.
இந்த மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் சமீபத்தில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என ஒரு கருத்தை கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக சட்டசபையில் ஆளுநர் ரவிக்கு எதிராக நேற்று தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று மாலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரண்டாம் முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த சட்டமானது இன்றே தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து இன்று தமிழ்நாடு அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.