இந்தியா
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: தொழிலாளர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், அதிக வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. மேலும் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகின்றது. சில நகரங்களில் பகல் நேரத்தில் 40 டிகிரி வெப்பநிலை நிலவுகிறது. நாட்டின் தலைநகர் டெல்லியை பொறுத்த வரையில் 2 வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவைக் காட்டிலும் 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து உள்ளது.
கடுமையான வெயில்
இந்தியாவின் பல பகுதிகளில் கடுமையான வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி பணி நேரத்தை மாற்றி அமைக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதி இருக்கிறது. மேலும், தொழிலாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு சுகாதார ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்
- வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதனால், வேலை நேரத்தை மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் மாற்றி அமைக்க வேண்டும்.
- வேலை செய்யும் இடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும்.
- சுரங்கத் தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வெடுக்க இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும்.
- கட்டுமானத் தொழிலாளர்கள் இருக்கும் இடங்களில் அவசர கால ஐஸ்பெட்டிகள் மற்றும் வெப்பநோய்த் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தினந்தினம் அதிகரித்து வரும் பகல் நேர வெப்பநிலையால் திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை சிறிது காலத்திற்கு மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.