தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 11 இடங்களில் சதம் அடித்த கோடை வெயில்!

கோடை காலம் தொடங்கி விட்ட நிலையில், நாளுக்கு நாள் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. பொதுமக்கள் பலரும் வெளியில் செல்வதற்கே பயப்படுகின்றனர். தமிழ்நாட்டில் கோடை கால வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
வெப்ப அலை
பகலில் நிலவும் வெப்ப அலையின் காரணமாக பொதுமக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேறவேத் தயக்கம் காட்டுகின்றனர். மேலும், கோடை வெப்பத்தை தணிக்க பொதுமக்கள் இளநீர், தர்பூசனி மற்றும் குளிர்பான கடைகளை நாடிச் செல்கின்றனர்.
சதமடித்த வெயில்
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் 11 இடங்களில் கோடை வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு மற்றும் வேலூரில் தலா 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
திருத்தணியில் 104 டிகிரி, திருப்பத்தூர் மற்றும் சேலத்தில் தலா 103 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், மதுரை விமான நிலையம், மற்றும் மதுரையில் 102 டிகிரி, நெல்லை மற்றும் தருமபுரியில் தலா 101 டிகிரி, தஞ்சாவூர் மற்றும் கோவையில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
இதற்கிடையில் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.