தமிழ்நாடு
காந்தியை காட்டிலும் பொறுமை காத்தவர் எடப்பாடி பழனிசாமி: செல்லூர் ராஜூ

நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகியின் செல்ஃபோனை பறித்து அதிமுகவினர் தாக்கினர். இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிசாமி காந்தியை விட மேலானவர் என பாராட்டியுள்ளார்.

#image_title
சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஆத்திரமடைந்து, அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்தார்.
முன்னதாக அந்த வீடியோவில், எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என பேசினார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் அவரை அதிமுகவினர் தாக்கினர். இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததின் பேரில் எடப்பாடி பழனிசாமி உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், நேற்று மதுரையில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு முன்னாள் முதலமைச்சர், மக்களால் மதிக்கக்கூடிய தலைவரை, ஒருமையில் ஒருவர் பேசுகிறார். அவர் சுயநினைவோடு இல்லை. மது அருந்தியிருக்கிறார். அரை போதையில் விமான நிலைய பேருந்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு, பேசக் கூடாத வார்த்தையைப் பேசுகிறார். அண்ணனுடைய பெயரைச் சொல்லி பேசுகிறார். துரோகி என்று பேசுகிறார். திரும்பத் திரும்பப் பேசுகிறார். யாராக இருந்தாலும், ஏன் காந்தியாக இருந்தாலும் அடித்திருப்பார். காந்தியை காட்டிலும் பொறுமை காத்தவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றார்.