தமிழ்நாடு
சென்னையில் ரூ.430 கோடி செலவில் 372 நவீன கழிவறைகள்!

சென்னை கார்ப்ரேஷன் சென்ற புதன்கிழமை, பேரூராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் முக்கிய இடங்களில் 372 கழிவறைகளை அமைக்கத் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த 372 கழிவறைகளும் ராயபுரம் (51), திருவிக நகர் (134), தேனாம்பேட்டை (மெரினா) உள்ளிட்ட இடங்களில் ஒரு வருடத்தில் அமைக்க உள்ளனர். மேலும் 8 ஆண்டுகளுக்கு இந்த கழிவறைகளைப் பராமரிக்கும் உரிமையையும் வழங்கியுள்ளனர்.
புதிய கழிவறைகள் மட்டுமல்லாமல் ராயபுரத்தில் 180 கழிவறைகள், திருவிக நகரில் 134 கழிவறைகள், மெரினா கடற்கரையில் 8 கழிவறைகள் என புதுப்பிக்கும் உரிமையும் இந்த தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் நீண்ட காலமாக பொது கழிவறைகள் பராமரிப்பு பணிகள் சரியில்லை, பல இடங்களில் கழிவறைகளே இல்லை என புகார்களும் செய்திகளும் வந்தபடி உள்ளன.
இந்நிலையில் அரசு தனியார் கூட்டு முயற்சியில் இந்த கழிவறைகளை அமைக்கும் பணிகளுக்குச் சென்னை நகராட்சி ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
மேலும் இந்த கழிவறைகள் நவீன வசதிகளுடன் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.