தமிழ்நாடு
ஒன்றரை மாதங்களாக சிக்காத சிறுத்தை சிக்கியது: கோவை மக்கள் நிம்மதி!

கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல பகுதிகளில் சுற்றி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தை புலி சிக்கியதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளதால் கோவை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவையில் உள்ள குனியமுத்தூர் என்ற பகுதியில் சுற்றித்திரிந்து அந்த பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிறுத்தை ஒன்று கடந்த 5 நாட்களுக்கு முன்பு தனியார் குடோனில் புகுந்தது பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையை உயிருடன் பிடிக்க திட்டமிட்டனர். தனியார் குடோனில் வலை கூண்டு ஒன்று அமைத்து அதில் இறைச்சி மற்றும் தண்ணீரை வைத்தனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இறைச்சியை உண்ண கூண்டுக்குள் செல்லாமல் சிறுத்தை புலி சிக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மீண்டும் உணவு மற்றும் தண்ணீர் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த உணவை சாப்பிட வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனை அடுத்து அந்த சிறுத்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும் பரிசோதனையில் சிறுத்தை புலி முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுற்றி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த சிறுத்தைப்புலி சிக்கியதால் அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







