தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி மீது இதற்காகத்தான் செருப்பு வீசினேன்: கைது செய்த காவல்துறை!

தமாக வேட்பாளரை ஆதரித்து தஞ்சை ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் செய்தபோது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது செருப்பு வீசிய மர்ம நபரை காவல்துறை கைது செய்துள்ளது.
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.நடராஜன் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக அங்கு போட்டியிடுகிறார். இதனையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் 9 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென செருப்பு ஒன்று முதல்வர் வாகனத்தின் மீது வீசப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்தே இந்த செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் செருப்பு முதல்வர் மீது படாமல், அவருக்குப் பின்புறத்தில் விழுந்தது. பின்னால் இருந்து செருப்பு வீசப்பட்டதால் யார் வீசினார்கள் என்பது அப்போது தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறை இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டது.
அதில், செருப்பு வீசியவர் ஒரத்தநாடு, கோனூர் பஞ்சாயத்து உப்புண்டார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதற்கான சான்றிதழ் அவரிடம் உள்ளது. இந்நிலையில் வேலுமுருகனிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலுக்கு வராமல் ஏன் இப்போது வந்தார்? அதனால்தான் செருப்பு வீசினேன். என்னைக் கேள்வி கேட்க உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என காவல்துறையை பார்த்து கேட்டுள்ளார் வேல்முருகன். இதனையடுத்து மனநிலை பாதிக்கப்பட்ட வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


















