தமிழ்நாடு
துரைமுருகன் மகனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பிரேமலதா வலியுறுத்தல்!

திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனை தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனை எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை என அரசியல் வட்டாரத்தி பேசப்படுகிறது.
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் துரைமுருகனை குறிவைத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும் நேற்று துரைமுருகனின் நண்பர் பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான சிமெண்ட் குடோனில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 11.8 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிகவை அசிங்கப்படுத்த துரைமுருகன் நடத்திய நாடகம் தற்போது அவருக்கே வினையாக முடிந்துள்ளது. தேமுதிகவையும் விஜயகாந்தையும் தொட்டவர்கள் வரலாறு இதுதான் என்பதற்கு சான்றாகவே இதனை பார்க்கிறேன் என்றார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், வேலூர் தொகுதியில் தேர்தலே ரத்து செய்யப்படலாம் என்கிறார்கள். ஒருவர் செய்த தவறுக்காக அனைவரும் தண்டனை பெறக்கூடாது. தவறு செய்த துரைமுருகன் மகனை மட்டும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

















