சினிமா
திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு மெல்போர்னில் சிறந்த நடிகருக்கான விருது!

மெல்போர்னில் நடைபெற்ற இந்திய திரைப்பட விருது விழாவில் பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்து நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக சிறப்பாக நடித்ததுக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் குமாரராஜா இயக்கத்தில் வெளியானது சூப்பர் டீலக்ஸ் திரைப்படம். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூப்பர் டீலக்ஸ் திரையிடப்பட்டது.
சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் ஆகிய மூன்று பிரிவுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த படம் சிறந்த நடிகருக்கான விருதை தட்டிச்சென்றுள்ளது. சிறந்த நடிகருக்கான போட்டி பிரிவில் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குரானா, விக்கி கெளஷல், மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் இருந்தனர். முடிவில், சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.






