இந்தியா
நீங்கள் ஒரு மீம்ஸ் கிரியேட்டரா? மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை..!

மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதும் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் மீம்ஸ் மூலம் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் பலர் புரிந்து வைத்துள்ளனர். அரசியல், சினிமா மற்றும் சமூகங்களில் நடக்கும் நிகழ்வுகளை மீம்ஸ் மூலம் சொல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீம்ஸ் என்பது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் பொழுது போக்கு அம்சம் என்பதையும் தாண்டி தற்போது வருமானம் தரும் ஒரு வேலையாகவும் மாறி உள்ளது. ஏற்கனவே ஒரு சில நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மீம்ஸ் கிரியேட்டர்களை வேலைக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒரு லட்ச ரூபாய் சம்பளத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களை வேலைக்கு அமர்த்த இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஸ்டாக்கரோ என்ற நிறுவனம் மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் தலைமை மீம்ஸ் அதிகாரியை நியமனம் செய்வதற்காக விளம்பரம் அளித்துள்ளது. இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுபவர் நிதி மற்றும் பங்குச்சந்தை சம்பந்தமான அறிவை பெற்றிருக்க வேண்டும் என்றும் வீட்டிலிருந்து அல்லது அலுவலகத்தில் இருந்து எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நிதிசந்தையை புரிந்து கொள்வது, நிதி மேலாண்மையை ட்ரெண்டிங் செய்வது போன்ற நிதி சம்பந்தப்பட்ட மீம்ஸ்களை வைரல் ஆக்க வேண்டும் என்றும் நகைச்சுவையுடன் நிறுவனத்தின் முக்கியத்துவத்தை சொல்ல வேண்டும் என்பதுதான் இந்த வேலைக்கான தகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் ஏற்படும் தாக்கத்தை தொழில்நுட்பத்தின் மூலம் கூறுவதை விட மீம்ஸ் மூலம் கூறினால் பார்வையாளர்களால் அதிகம் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தை மற்றும் நிதி மேலாண்மை குறித்த விழிப்புணர்வை நகைச்சுவையுடன் அதே நேரத்தில் மக்கள் மனதில் சென்று அடையும் வகையில் மீம்ஸ்களை கையாள வேண்டும் என்பதே இந்த வேலைக்கு சேருபவரின் ஒரே பணி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது இந்த வேலை தெரிந்தவர்களை பரிந்துரை செய்யலாம் ஸ்டாக்கரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. நீங்கள் பரிந்துரை செய்யப்படும் நபர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டால் பரிந்துரை செய்தவருக்கு ஐபேடு பரிசாக தரப்படும் என்றும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
மாதம் ஒரு லட்சம் சம்பளம் மற்றும் நிறுவனத்தின் அனைத்து சலுகைகளையும் இந்த வேலையில் சேர்ப்பவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவார்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லிங்க்ட்-இன் பக்கத்தை பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டாக்க்ரோவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் லகோட்டியா இந்த வேலை குறித்து கூறுகையில், ‘தலைமை மீம்ஸ் அதிகாரியின் சற்று வழக்கத்திற்கு மாறான பாத்திரம் தான். அவர் எங்கள் வாடிக்கையாளருடன் இணைய வேண்டும். வரவிருக்கும் பயனர்களிடையே ஒரு சலசலப்பை உருவாக்க மற்றும் ஸ்டாக்க்ரோ நிறுவனத்தை ஆராய அவர்களை கவர்ந்திழுக்க வலுவான மீம் கேம் இருப்பது அவசியம். எங்கள் தலைமை மீம்ஸ் அதிகாரி படைப்பாற்றலை மிகவும் வழக்கத்திற்கு மாறான அதே சமயம் தொடர்புபடுத்தக்கூடிய விதத்தில் உருவகப்படுத்துவார். மேலும் மீம் மார்க்கெட்டிங் மாயாஜாலத்தைக் காண நாங்கள் காத்திருக்கின்றோம்’ என்று கூறியுள்ளார்.