இந்தியா
இந்தியாவுக்கு 31,000 விமானிகள், 26,000 மெக்கானிக்குகள் தேவை: போயிங் நிறுவனம் கணிப்பு..!

உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான ஆர்டர்கள் குவிந்து உள்ளதை அடுத்து இந்நிறுவனம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் போயிங் இந்திய தலைவர் சலில் அவர்கள் பேசினார். அப்போது அவர் கூறிய போது ’தெற்காசியா பகுதிகளில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் குறிப்பாக விமான சந்தையில் இந்தியா அபரிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.
அடுத்த 20 ஆண்டுகளில் உலகில் மிக வேகமாக வளரும் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் அவர் அறிவித்தார். இந்தியாவிலிருந்து கிடைத்திருக்கும் விமானங்களின் ஆர்டர்களை வைத்து பார்த்திருக்கும் போது அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 பைலட்டுகள் மற்றும் 26,000 விமானம் மெக்கானிக்குகள் தேவைப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இந்திய விமான சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய விமான போக்குவரத்து துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் உள்ளடக்கிய கட்டமைப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் விமானிகள், விமான மெக்கானிக்குகள் உள்பட கட்டமைப்புகளை வலுவாக மாற்றுவதில் விமான நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா கடந்த மாதம் ஏர்பஸ் மற்றும் போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு 470 விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்குவதாக அறிவித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் விமான போக்குவரத்து வளர்ச்சி சதவீதம் 7 சதவீதமாக இருக்கும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் விமான பயணத்தின் தேவை அதிகரித்துள்ளதாகவும் இது உலகையே திகைக்க வைத்துள்ளதாகவும் சலீல் தெரிவித்தார்.
அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் பிற நாடுகளின் வங்கி நிலைமையின் விளைவுகள் விமான போக்குவரத்து தேவையில் எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் 90 சதவீத விமான சந்தை வளர்ச்சி அடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் ஒவ்வொரு விமான ஆர்டர்களையும் பார்க்கும்போது எங்கள் நிறுவனம் இந்தியாவை பார்த்து பெருமைப்படுகிறது. என்றும் இந்த அவர் தெரிவித்துள்ளார்.