இந்தியா
10 ஆயிரம் கோடி அல்ல, 1200 கோடி மட்டும் தான்.. திமுக எம்பிக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்

தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை 10 ஆயிரம் கோடி மத்திய அரசு தரவேண்டும் என்றும் அந்த தொகையை உடனே வழங்க வேண்டும் என்றும் திமுக எம்பி வில்சன் நாடாளுமன்றத்தில் பேசிய நிலையில் தமிழகத்திற்கு அளிக்கவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகை 10 ஆயிரம் கோடி அல்ல என்றும் வெறும் 1200 கோடி தான் என்றும் அந்த பணமும் தமிழகத்திலிருந்து பயன்பாட்டு சான்றிதழ் கிடைக்க பெறாததால் தான் நிலுவையில் உள்ளது என்றும் எனவே அதை நிலுவையாக கருத முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பாக்கி இருப்பதாக அவ்வப்போது அரசியல் கட்சி தலைவர்கள் பேசி வந்தாலும் இது குறித்த புரிதல் இல்லாமல் தான் பேசுவதாக கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி நிலுவைத் தொகை என்பது ஒவ்வொரு செட்டில்மெண்ட்டுக்கும் ஒரு காலக்கெடு சட்டத்தில் உள்ளது. அதன்படிதான் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்கப்படும்.
ஜிஎஸ்டி ரிட்டன் என்பது பெரும்பாலான வணிகர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான் தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில்தான் ஜிஎஸ்டி நிலுவை தொகையும் மாநிலங்களுக்கு பகிர்ந்து தரப்படும். இது கூட ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்கு விற்பனை செய்யும் போதோ அல்லது பொருட்கள் வாங்கும்போது அதற்கு விதிக்கப்படும் சேவைக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் அதாவது தமிழ்நாட்டிற்குள் விற்பனை செய்யும் வணிகர்கள் ஜிஎஸ்டி தாக்கல் செய்த அன்றே தமிழக அரசின் கணக்கில் நேரடியாக நிலுவை தொகை வரவேற்கப்படும். இதுதான் நடைமுறையாக இருந்து வருகிறது. இதை புரிந்து கொள்ளாமல் அரசியல்வாதி உள்பட பலர் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை இருப்பதாக கருத்து கூறி வருவது முற்றிலும் அரசியல் காரணங்களுக்கு என்றுதான் கூறப்படுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் 10,000 கோடி நிலுவையில் இருப்பதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி எந்தவித ஆதாரமும் இல்லாமல் புகார் அளித்திருந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு ஜிஎஸ்டி பாக்கி தொகையை 1200 கோடி மட்டுமே என்று பதிலளித்துள்ளார். மேலும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை ரூபாய் 17,000 கோடி என்றும் அதையும் விரைவில் செலுத்த உள்ளோம் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.























