தமிழ்நாடு
மீன்பிடி தடை காலம் தொடங்கியதால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த மீன்களின் விலை!

கடல் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் 61 நாட்கள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதே போல் இந்த ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த நாட்களில், மீன்களின் விலை எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும். அவ்வகையில், நாட்டுப் படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கானத் தேவை அதிகரித்து இருக்கும் நிலையில், மீன்களின் விலை மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மீன்பிடி தடை காலம்
மீன்பிடி தடை காலம் நேற்று முதல் தொடங்கி உள்ளதால், கன்னியாகுமரியில் மீன்களின் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. நாட்டுப் படகுகளில் பிடிக்கப்படும் மீன்களுக்கானத் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அவற்றிற்கான விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மீன் ப்ரியர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இருப்பினும், ஆண்டுதோறும் மீன்பிடித் தடை காலத்தில் மீன்களின் விலை அதிகமாகத் தான் இருக்கும் என்பதால், பொதுமக்கள் இதனை சாதாரணமாகத் தான் பார்க்கின்றனர்.
மீன்கள் விலை உயர்வு
நேற்று முன்தினம் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சிரம் மீன், நேற்று 1,000 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோல, பாரை மீன் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், விளை மீன் ஒரு கிலோ 400 ரூபாய்க்கும், சங்கரா மீன் ஒரு கிலோ 350 ரூபாய்க்கும் விற்பனையானது.