சினிமா செய்திகள்
வங்க புலிகளை தத்தெடுத்த மக்கள் செல்வன்!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு வங்க புலிகளை நடிகர் விஜய்சேதுபதி தத்தெடுத்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வன விலங்குகளை விருப்பமுள்ளவர்கள் 6 மாத காலத்திற்கோ அல்லது ஒரு வருட காலத்திற்கோ தத்தெடுக்கலாம் என்ற முறை அமல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சமீபத்தில் அனுசரிக்கப்பட்ட உலக வன உயிரின தினத்தன்று, ஆர்த்தி என்ற பெண் புலியையும், ஆதித்யன் என்ற ஆண் புலியையும் ஆறு மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதற்காக, 5 லட்சம் ரூபாய் தொகையை கொடுத்துள்ளார்.
இந்த ஆறு மாத காலத்திற்கு விஜய்சேதுபதியின் பராமரிப்பு செலவில் இந்த இரண்டு வங்க புலிகளும் பராமரிக்கப்படும்.
முன்னதாக, நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள அனு என்கிற வெள்ளை புலியை ஆறு மாத காலத்திற்கு தத்தெடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை மற்றும் வன உயிரினங்களின் மீது இளம் நடிகர்கள் ஆர்வத்தை காட்டுவது வரவேற்புக்குரியது என பலரும் பாராட்டி வருகின்றனர்.


















