உலகம்
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கு தடை!

சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் செல்ல தடை என ஐக்கிய அரபு எமிரேட் உத்தரவிட்டுள்ளது.
வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் போது குடிமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என ஐக்கிய அரபு எமிரேட் வெளியுறவு அமைச்சகம் மற்றும் தேசிய அவசர, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல ஐக்கிய அரபு எமிரேட் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 14 நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட் வருபவர்களுக்கும் கோவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் மக்கள் விமான போக்குவரத்து ஆணையம் ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, சாம்பியா, வியட்நாம், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜூலை 21-ம் தேதி தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தடையில் இருந்து சரக்கு, வணிக மற்றும் சார்ட்டர் விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட் பயணிகளில் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்கு கொரோனா தொற்று உறுதியானால் அந்த நாடுகளின் நெறிமுறைகளைப் பின்பற்றவும் என அறிவுறுத்தியுள்ளது.
ஏப்ரல் மாதம் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்த உடன் முதல் நாடாக இந்தியா செல்லும் பயணிகளுக்குத் தடை விதித்த நாடு ஐக்கிய அரபு எமிரேட் என்பது குறிப்பிடத்தக்கது.












