தமிழ்நாடு
விஜய் சேதுபதியை எச்சரிக்கும் தமிழிசை: விவரம் தெரியாத நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு அதனை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளிடம் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல தமிழ் நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது ஜனநாயக விரோதமான செயல். இதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. காஷ்மீர் விவகாரம் பற்றி பெரியார் அன்றே கருத்து கூறிவிட்டார். அதாவது அடுத்தவர் வீட்டு பிரச்னையில் மற்றொருவர் தலையிட முடியாது, தலையிட கூடாது. பக்கத்து வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம், ஆளுமை செலுத்தக்கூடாது என்று பெரியார் கூறியிருக்கிறார் என விஜய் சேதுபதி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் கருத்துக்கு பதில் கூறும் வகையில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, காஷ்மீர் பற்றி சிலர் தவறான கருத்தை பரப்பி வருகிறார்கள். சினிமாவில் நடிப்பவர்களுக்கு காஷ்மீர் பிரச்சனை பற்றி என்ன தெரியும்? காஷ்மீர் பற்றி ஒன்றுமே தெரியாத நபர்கள் எல்லாம் கருத்து கூறுகிறார்கள். பெரியார் பற்றி தேவையற்ற எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்கள்.
அவர்கள் சினிமாவில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைக்கு சர்வதேச நாடுகள், அரசியல் தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், விவரம் தெரியாத நடிகர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது என்றார் தமிழிசை.

















