இந்தியா
புறாவின் காலில் கேமிரா, மைக்ரோ சிப்? தடயவியல் அதிகாரிகள் அதிர்ச்சி..!

சமீபத்தில் மீனவர்களிடம் பிடிபட்ட புறா ஒன்றின் காலில் மைக்ரோ சிப் மற்றும் கேமரா போன்ற கருவிகள் இருந்ததை அடுத்து அந்த கருவிகளை தடயவியல் அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மீனவர் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென புறா ஒன்று அந்த படகில் வந்து உட்கார்ந்தது. முதலில் சாதாரணமாக அந்த புறாவை பார்த்த மீனவர் அதன் பின் அதன் காலில் ஏதோ கட்டப்பட்டிருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து அந்த புறாவை அவர் பிடித்து பார்த்தபோது புறாவின் காலில் இரண்டு கருவிகள் இருந்தது போல் தெரிந்தது. அதுமட்டுமின்றி அந்த புறாவின் இறகுகளில் ஏதோ ஒரு மொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரிந்தது. அந்த மீனவருக்கு ஒடியா மொழியை தவிர வேறு மொழி தெரியாததால் இது எந்த மொழி? அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை தெரியவில்லை.
இதனை அடுத்து அந்த மீனவர் கரைக்கு வந்ததும் அந்த புறாவை காவல்துறையிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் அந்த புறாவின் காலில் கட்டப்பட்டிருந்த மைக்ரோ சிப் மற்றும் கேமராவை பறிமுதல் செய்து தடயவியல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர், இது வெளிநாட்டில் இருந்து உளவு பார்க்க வந்த புறாவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட கேமரா மற்றும் மைக்ரோ சிப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய மாநில தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் ஆய்வகத்தின் அறிக்கை வந்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடலோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் இருந்து புறா ஒன்று காஷ்மீர் பகுதிக்கு வந்ததாகவும் அந்த புறாவின் காலில் மைக்ரோசிப் இருந்ததாகவும் கூறப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமும் இதே போன்ற ஒரு புறா பஞ்சாப் எல்லையில் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசர்கள் காலத்தில் புறாவின் காலில் கடிதங்களை கட்டிவிட்டு அனுப்பும் பழக்கம் இருந்த நிலையில் தற்போது புறாவை உறவுக்கு பயன்படுத்தும் நடவடிக்கை இருப்பதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.