தமிழ்நாடு
ஸ்டாலின், தமிழிசை டுவிட்டரில் வார்த்தைப்போர்: சூரியன் நினைத்தால் தாமரை கருகும்!

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக எதிர்க்கட்சிகள் ஸ்டாலின் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மத்திய அரசை கடுமையாக சாடினர். அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மழையே இல்லை, தண்ணீரே இல்லாத நிலையில் புல்லே முளைக்க முடியாத நிலையில் தமிழகத்தில் தாமரை மலரும் என்று எந்த முகத்தை வைத்துக்கொண்டு கூறுகிறார்கள் என்றார்.
ஸ்டாலினின் இந்த கருத்துக்கு தனது டுவிட்டரில் பதில் அளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை, இனி மழை காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும் தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழை நீரை வைத்தாகிலும் தாமரை மலரச் செய்வோம். காவிப்படையின் இரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும் என்றார்.
இந்நிலையில் தமிழிசையின் இந்த டுவிட்டர் பதிவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார். அதில், சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரியசக்தி நினைத்தால் தாமரையும் கருகும் என்றார் அதிரடியாக.


















