சினிமா செய்திகள்
’இந்தியன் 2’ படத்தை முடித்துக்கொடுக்க ஷங்கர் சம்மதம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஒரு சில காரணங்களால் நடைபெறவில்லை. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர் திடீரென தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்தது. ’இந்தியன் 2’ படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என்றும் அவர் வேறு படத்தை இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தது.
ஆனால் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் தொடங்கிய போதும் ’இந்தியன் 2’ பட பிரச்சினை தொடர்பாக ஷங்கர் மற்றும் லைகா நிறுவனம் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்றும் இரு தரப்பினரும் கலந்து பேசி தீர்வு காண என்று அறிவுறுத்தியது. மேலும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் இந்த விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனை அடுத்து ஷங்கர் தரப்பில் வரும் ஜூலை முதல் அக்டோபர் வரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ’இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்க முயற்சிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






















