சினிமா செய்திகள்
சாய் பல்லவியின் தங்கையும் கதாநாயகியாக அறிமுகமாகிறார் – யார் இயக்குநர் தெரியுமா?

அவ்வப்போது திரைப்படங்களில் நடித்தாலும், தன் அசாத்திய நடனத்தாலும், க்யூட் நடிப்பாலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை சாய் பல்லவி. அவரது குடும்பத்தில் தற்போது இன்னொருவரும் கதாநாயகியாக தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆக இருக்கிறார்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி சண்டை இயக்குநராக வலம் வருபவர் ஸ்டண்ட் சில்வா. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் பணிபுரிந்துள்ளார். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஸ்டண்ட் சில்வா பணிபுரிந்துள்ளார்.
சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘மாஸ்டர்’ படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவரும் ஸ்டண்ட் சில்வாதான். தற்போது இவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி தயாரிக்கிறார் இயக்குநர் விஜய். அவர் இயக்கிய படங்களின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர் ஸ்டண்ட் சில்வாதான். இருவருமே நெருங்கிய நண்பர்கள். ஆகையால், அவரை இயக்குநராக அறிமுகம் செய்கிறார் இயக்குநர் விஜய்.
இதில் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பூஜா கண்ணன். இவர் சாய் பல்லவியின் தங்கை ஆவார். இவர் தற்போது இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக ஸ்டண்ட் சில்வா படம் அமைந்துள்ளது. இதில் சமுத்திரக்கனி, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.


















