சினிமா செய்திகள்
விஜய்யின் 67வது படத்தை இயக்கும் இயக்குனர் பெயர்: விக்கிபீடியாவில் வெளியிட்டதால் பரபரப்பு!

தளபதி விஜயின் 67 வது படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் விக்கிபீடியாவில் பதிவு செய்யப்பட்டதை அடுத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படம் பீஸ்ட் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் தளபதி விஜய் நடிக்கும் 66ஆவது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை தில் ராஜூ என்பவர் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லி இயக்குவார் என திரையுலக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் இந்த படத்தை ஆர்.டி.நேசன் என்பவர் இயக்குவார் என அவரது விக்கிபீடியா பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஆர்.டி.நேசன் விஜய் நடித்த ஜில்லா என்ற திரைப்படத்தை கடந்த 2014ஆம் ஆண்டு இயக்கினார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ஜில்லா இயக்குனர் ஆர்.டி.நேசனின் விக்கிபீடியா பக்கத்தில் தளபதி 67 படத்தை 2023 ஆம் ஆண்டு ஆர்.டி.நேசன் இயக்க இருப்பதாக பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விக்கிபீடியா பக்கத்தை பொருத்தவரை யார் வேண்டுமானாலும் அதை எடிட் செய்து எந்த திருத்தமும் செய்யலாம் என்று இருப்பதால் அதனை விஜய் ரசிகர்கள் அல்லது வேறு யாராவது இதனை செய்திருக்கலாம் என்றும் ஆனால் அதிகாரப்பூர்வமாக விஜய் தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே விஜய் 67 படத்தின் இயக்குனர் யார் என்பது தெரியவரும் என்றும் விஜய் வட்டாரத்தில் கூறப்பட்டு வருகிறது.








