ஆட்டோமொபைல்
தமிழ்நாட்டில் 40 சுங்கச் சாவடிகளில் இன்று ஏப்ரல் 1 நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு.

ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச் சாவடிகளில் 40 சுங்கச் சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அந்த அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த சுங்கச் சாவடிகளில் ஒன்றிய தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஒப்பந்தப்படி 1992 ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
அந்த வகையில் அரியலுார் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலுார் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனாம் காரியேந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி சென்னையை அடுத்த பரனுார், திண்டிவனம்-ஆத்துார், நெல்லுார், நாங்குநேரி, சென்னை-பெங்களுரு சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதுார், பட்டறைப் பெரும்புதுார், பள்ளிகொண்டா, புதுக்கோட்டை-வாகைக்குளம், எஸ்விபுரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி, செங்கல்பட்டு உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே காலாவதியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இதனை மூடவேண்டும் என்று பல்வேறு வாகன உரிமையாளர் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் வேளையில் இந்த கட்டண உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
15 ஆண்டுகளை கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்படவேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதிப்படி பார்த்தால் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூடியிருக்க வேண்டும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 12 புதிய சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டதோடு அல்லாமல் கட்டண உயர்வும் செய்திருப்பது ஒன்றிய அரசின் மீது மக்களிடம் மேலும் வெறுப்பை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
