இந்தியா
புல்வாமா தாக்குதல் தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாக சொல்லப்பட்டதா?

புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்த பின்னரும் பிரதமர் மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இந்நிலையில் புல்வாமா தாக்குதல் குறித்த தகவல் பிரதமர் மோடிக்கு தாமதமாகவே தெரிவிக்கப்பட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா, புல்வாமா தாக்குதல் மாலை 3.10 மணிக்கு நடந்தது. ஆனால் பிரதமர் மோடி மாலை 6.40 மணி வரை கார்பெட் தேசிய பூங்காவில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார். நாடே வருத்தத்தில் இருக்கும்போது மோடி படப்பிடிப்பில் பிஸியாக இருந்தார். இதுபோன்ற பிரதமர் உலகில் வேறெங்காவது உண்டா? என கேள்வி எழுப்பினார். மேலும் சில புகைப்படங்களையும் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக காட்டினார் அவர்.
இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியது. மோடியின் இந்த நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்த தகவல் பிரதமருக்குக் கிடைத்தவுடன் ருத்ராபூரில் நடக்கவிருந்த கூட்டத்தை அவர் உடனடியாக ரத்து செய்துவிட்டார்.
சுமார் 4 மணியளவில் கார்பெட் தேசியப் பூங்காவிலிருந்து ருத்ராபூர் செல்லும்போதுதான் முதல் செய்தி பிரதமர் மோடிக்கு சொல்லப்பட்டது. தாமதமாகக் கூறியதற்காக அவர் மிகவும் கோபப்பட்டார். பின்னர் 4.45 மணி வரை நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























