இந்தியா
கர்நாடக சட்டசபைத் தேர்தல்: 136 தொகுதிகளை வென்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ்!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜகவும், மதசார்பற்ற ஜனதா தளமும் பின்னடைவை சந்தித்து உள்ளன. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சியின் பதவிக் காலம் வருகின்ற 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல்
கர்நாடக மாநிலத்தில் 16வது சட்ட சபையைத் தேர்ந்தெடுப்பதற்காக, 224 தொகுதிகளை கடந்த மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கர்நாடக சட்டசபைத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
காங்கிரஸ் வெற்றி
இறுதியாக தோ்தல் முடிவு வெளியிடப்பட்டதில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 104 தொகுதிகளையும், காங்கிரஸ் 80 தொகுதிகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அபாரமான வெற்றி கிடைத்து உள்ளதால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
புதிய முதல் மந்திரி பதவி ஏற்பு விழா வருகின்ற 17 அல்லது 18 ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.