இந்தியா
அரசு பங்களாவை காலி செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி!

பிரதமர் நரேந்திர மோடி குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு இருப்பதால், அவருடைய எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், அவதூறு வழக்கில் குற்றவாளி என வழக்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்யும்படி, ராகுல்காந்தி சூரத் கோர்ட்டில் மேல்முறையீடும் செய்துள்ளார். அந்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இருப்பினும் இதனை எதிர்த்து ராகுல்காந்தி குஜராத் ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.
அரசு பங்களா
ராகுல்காந்தி வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யும்படி மக்களவை செயலாளர் கடந்த 27 ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசைத் தொடர்ந்து, அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல், டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வந்த ராகுல்காந்தி, இன்று பங்களாவை காலி செய்து வெளியேறினார். அவருடைய பொருட்கள் அனைத்தும் ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட நிலையில், இன்று அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.
உண்மையை பேசியதற்கான விலை
அரசு பங்களாவை காலி செய்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகுல்காந்தி, இந்திய மக்கள் இந்த வீட்டை எனக்கு 19 ஆண்டுகள் கொடுத்தனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையை பேசியதற்கான விலை இது தான். உண்மையை பேசுவதற்கு எத்தகைய விலையையும் கொடுக்க நான் தயாராக உள்ளேன் என்றார் ராகுல் காந்தி.