இந்தியா
ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமாவா? புதுவையில் பரபரப்பு!

தமிழகத்தைப் போலவே புதுவையிலும் வரும் மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு உள்ள ஆளுங்கட்சியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்து பாஜக பக்கம் சென்று கொண்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் ராஜினாமா செய்த நிலையில் இன்று ஜான்குமார் என்ற காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்தார். இதனை அடுத்து 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது. இதனால் புதுவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை அடுத்து ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நிலையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவையில் ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தால் தேர்தல் வரை காபந்து அரசு நீடிக்கும் அல்லது கவர்னர் ஆட்சி ஏற்படும் என்று கூறப்பட்டு வருகிறது




















