இந்தியா
இலங்கையில் தொடங்கப்படுகிறதா பாஜக? அந்நாட்டு தேர்தல் ஆணையம் கூறுவது என்ன?

கடந்த முப்பது வருடங்களுக்கு முன்னால் அகில இந்திய அளவில் மிகவும் சிறிய கட்சியாக இருந்த பாஜக, தற்போது மத்தியில் இரண்டு முறை ஆட்சியை தொடர்ந்து பிடிக்கும் அளவுக்கு மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து விட்டது.
தமிழகம், கேரளா உள்பட ஒருசில மாநிலங்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் பாஜகவின் கொடி தான் பறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் தமிழகத்திலும் கேரளாவிலும் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவையும் தாண்டி இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாரதிய ஜனதா கட்சியை விரிவுபடுத்த அக்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே திரிபுரா முதலமைச்சர் இது குறித்து பேசிய போது ’பாஜக கட்சி இந்தியாவில் மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் விரிவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் குறிப்பாக இலங்கை மற்றும் நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும் கூறியிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இலங்கை தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் அளித்தபோது இலங்கையில் பாஜக கட்சியை தொடங்க அனுமதி இல்லை என்றும் இந்நாட்டு சட்டத்தின் படி பாரதிய ஜனதா கட்சி இங்கு கட்சியை தொடங்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இலங்கை பிரதமர் ராஜபக்சே, பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு நெருக்கமானவர் என்பதால் விரைவில் அந்நாட்டில் பாஜக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.