இந்தியா
ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.500 வழங்கும் தேதி அறிவிப்பு!

மத்திய அரசு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு இரண்டாவது தவணையாக ரூ.500 வழங்கும் தேதிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் தொடரப்பட்டு வரும் ஊடரங்கால், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்திற்காக ஜன் தன் சேமிப்பு கணக்குகளுக்கு மூன்று தவணையாக 500 ரூபாய் வழங்கப்படும் என்று மார்ச் மாதம் 26-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.
ஏப்ரல் மாதத்திற்கான 500 ரூபாய் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மே 4-ம் தேதி முதல் பணத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நிவாரண பணத்தை ஜன் தன் வங்கி கணக்கிலிருந்து எடுக்க விரும்பும் பெண்கள், வங்கி கணக்கு எண்ணின் கடைசி வரிசை படி குறிப்பிட்ட தேதிகளில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதான் மந்திரி ஜன் தன் சேமிப்பு கணக்கு எண் 0 மற்றும் 1 என்று முடியும் போது மே 4-ம் தேதியும், 2 ல்லது 3 என்ற எண்களுடன் முடியும் சேமிப்பு கணக்கு எண் வைத்துள்ளவர்கள் மே 5-ம் தேதியும், 5 அல்லது 4 என்று முடியும் சேமிப்பு கணக்கை வைத்துள்ளவர்கள் மே 6-ம் தேதியும், 6 அல்லது 7 என்று முடியும் கணக்கை வைத்துள்ளவர்கள் மே 8-ம் தேதியும், 8 அல்லது 9 என்று முடியும் கணக்கை வைத்துள்ளவர்கள் மே 11-ம் தேதியும் பணத்தை பெறலாம்.
மேலே குறிப்பிட்ட தேதிகளை பணத்தை பெறவில்லை என்றால் மே 12-ம் தேதி முதல் எந்த தேதிகளில் வேண்டுமானாலும் வங்கி கிளை அல்லது ஏடிஎம் மையங்கள் சென்று பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20.5 கோடி ஜன் தன் சேமிப்பு கணக்குகளுக்கு ஏப்ரல் மாதம் 500 ரூபாய் அளித்ததன் மூலம் மத்திய அரசுக்கு 10,025 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இன்னும் மே மற்றும் ஜூன் மாதத்திற்கு ஜன் தன் சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.















