உலகம்
வேலைநீக்கம் பட்டியலில் இணைந்த Pinterest .. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

கடந்த ஜனவரி மாதம் மட்டும் உலகம் முழுவதிலும் உள்ள 219 நிறுவனங்களில் இருந்து 68,000 பேர் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வேலை நீக்க பட்டியல் நிறுவனங்களில் Pinterest நிறுவனம் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும் பணவீக்கம் மற்றும் வட்டி உயர்வு காரணமாகவும் பெரிய நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை இழந்து வருகின்றன. இந்த நிலையில் லாபத்தை அதிகரிக்கவும் சிக்கன நடவடிக்கையை எடுக்கவும் நஷ்டத்தை தவிர்க்கவும் பல்வேறு நிறுவனங்கள் வேலைநீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது என்பதும், வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் கண்ணீருடன் தங்களது சமூக வலைதளத்தில் செய்து வரும் பதிவுகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது என்றும் இதனால் மேலும் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ள Pinterest நிறுவனமும் வேலை மிக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த புகைப்பட பகிர்வு மற்றும் சமூக ஊடகமான Pinterest சுமார் 150 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி புரிந்து வருவதாகவும் இப்போதைக்கு மேலும் வேலை நீக்க நடவடிக்கை இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. எங்கள் நிறுவனம் நீண்ட கால லாபத்தை கணக்கில் கொண்டு சிக்கன நடவடிக்கையை எடுத்து உள்ளோம் என்றும் சில மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம் என்றும் அந்த வகையில் முதல் கட்டமாக 150 ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் Pinterest செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை தான் நாங்களும் பின்பற்ற முடியும் என்றும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் விரைவில் வேறு வேலை கிடைக்க எங்களது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.