இந்தியா
ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மணீஷ் சிசோடியா கைதுக்கு பினராயி விஜயன் கண்டனம்!

டெல்லி துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியாவை டெல்லி மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறி சிபிஐ நேற்று 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்தது. இதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சிபிஐ விசாரணைக்கு அழைத்த நிலையில், விசாரணைக்கு அலுவலகத்துக்கு செல்லும் முன்னரே தான் இன்று கைது செய்யப்படலாம் என கூறிவிட்டு தான் சென்றார் மணீஷ் சிசோடியா. இவரது இந்த கைது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
மணீஷ் சிசோடியா கைதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர், பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்தையும் ஆம் ஆத்மி கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மணீஷ் சிசோடியா கைதுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்திருப்பது, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக, மத்திய அரசின் அமைப்புகளை பாஜக எப்படி தவறாகப் பயன்படுத்துகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பாஜகவின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என பதிவிட்டுள்ளார். முன்னதாக பாஜக செய்தி தொடர்பாளர் அடுத்ததாக அரவிந்த் கேஜ்ரிவாலும் கைது செய்யப்படுவார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.