தமிழ்நாடு
12 மணி நேர வேலை… எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது!

8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலை என மாற்றி வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுப்பு என்ற திருத்த சட்ட மசோதா சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுகவின் கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 125-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது.
தமிழக சட்டசபையில் நேற்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தனியார் நிறுவனங்களில் பணி நேரம் 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த 2023-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் 125-க்கும் அதிகமான உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த சட்டத்தை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து சட்ட சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போக்குவரத்துக்கு இடையூராக செயல்பட்டதாக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.