இந்தியா
கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன்.. மன வருத்தத்தில் எடுத்த முடிவுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

கடைசி காலத்தில் அம்மாவை கவனிக்க முடியாத மகன் எடுத்த அதிரடி முடிவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
மும்பையை சேர்ந்த தன்ராஜ் என்பவர் 25 ஆண்டுகளாக தனது அம்மாவை தன்னுடன் வைத்து கவனித்துக் கொண்டார். அவரது மனைவி விஜயாவும் தனது மாமியாருக்கு தொண்டு சேவை புரிந்து வந்தார். ஆனால் தன்ராஜின் தாயாரின் கடைசி காலத்தில் தனது கிராமத்தில் இருக்க விரும்பி சென்று விட்டார். இந்த நிலையில் ஒரு சில வருடங்கள் கிராமத்தில் இருந்த தன்ராஜின் தாயார் உடல் காரணமாக அங்கேயே காலமானார்.
தனது தாயாரின் சொந்த கிராமத்தில் அவரை கவனிக்க யாரும் இல்லாததுதான் அவர் இறந்ததற்கு காரணம் என்ற மனக்குறையுடன் தன்ராஜ் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். இதனை அடுத்து அவர் அதிரடி முடிவெடுத்து தனது தாயாரை கடைசி காலத்தில் கவனிக்க முடியாமல் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஒரு முதியோர் இல்லத்தை தொடங்க முடிவு செய்தார்.
ஓய்வு பெற்றவுடன் அவருக்கு வந்த பணம் முழுவதையும் முதியோர் இல்லம் கட்டுவதற்காக திட்டமிட்டார். முதலில் ஒரு சொந்த இடம் வாங்கி அதில் ஒரு கட்டிடத்தை கட்டி முதியோர் இல்லமாக மாற்றினார். அந்த முதியோர் இல்லத்தில் வரும் 8 பேருக்கு ஒரு பணியாளர் 24 மணி நேரம் நர்சுகள் பராமரிப்பு மற்றும் அந்த முதியோர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக மாதம் பத்தாயிரம் ரூபாய் என பல்வேறு உதவிகளை செய்தார்.
பார்வதி பாபாஜி ஹசாரே என்ற அறக்கட்டளை மூலம் அவர் இந்த தொண்டுகளை சில ஆண்டுகளாக செய்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட முதியோர் இல்லம் தற்போது மிகப்பெரிய அளவில் ஏராளமான முதியோர்களை காக்கும் ஒரு இல்லமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தன்ராஜின் மனைவி விஜயா கூறிய போது எங்கள் மாமியார் எங்களுடன் 25 ஆண்டுகள் இருக்கும்போது நன்றாக இருந்தார். ஆனால் ஒரு சில ஆண்டுகள் அவர் தனியாக கிராமத்தில் இருந்தபோது அவரை கவனிக்க யாரும் இல்லாததால் அவர் காலமானார். இது எனது கணவருக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. இதனால் தான் எங்கள் மாமியாரின் வயதில் உள்ள முதியோர்களை பாதுகாக்க நாங்கள் முடிவு செய்தோம். முதியோர்களுக்கு செய்யும் சேவை நம் பெற்றோருக்கு செய்யும் சேவை போலாகும் என்று எங்கள் மனம் உணர்கிறது என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தன்ராஜ் மற்றும் விஜயா தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.