தமிழ்நாடு
நீதிபதிகள் இந்த மனநிலையில் இருந்தால் அரசியலமைப்பு நிலைத்திருக்காது: மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதியாக இருக்கும் ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசியலமைப்பு மற்றும் மக்கள் தொகை குறித்து கூறிய கருத்துக்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், நான் இப்போது கூறும் கருத்துக்கள் சர்ச்சைக்குரிய வகையில் மாறலாம். அரசியலமைப்புச் சட்டத்தின் பல அம்சங்களின் வரைவு 1947-இல் தொடங்கியது. இந்த அரசியலமைப்புச் சட்டம் அப்படியே இருக்க வேண்டும் என்றால், அது உருவாக்கப்பட்ட போது இருந்த மக்கள் தொகை விவரம் அப்படியே இருக்க வேண்டும். மக்கள் தொகை விவரம் மாற்றப்பட்டால், அரசியலமைப்பு இருக்காது.
மக்கள்தொகை விவரங்கள் எப்படி ஒரே மாதிரியாக இருக்க முடியும் என்றால், பாரதிய சம்பிரதாயத்தையும் பாரதிய தர்மத்தையும் பின்பற்றுபவர்கள் அதே பாரம்பரியத்தில் இருக்க வேண்டும். ஒரு நீதிபதி என்ற முறையில் இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியாது. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இதற்கு மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அரசியலமைப்பு தொடர்ந்து ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றால் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது இருந்த மக்கள் தொகை விவரம் அப்படியே தொடர்ந்து பராமரிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதிபதிகள் இத்தகைய மனநிலையில் இருந்தால் அரசியலமைப்பு நிலைத்திருக்காது என்று பதிவிட்டுள்ளார்.





















