சினிமா
கலாஷேத்ரா விவகாரம்: அஜித் படத்தைக் காட்டி அபிராமிக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்கள்!

கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி கூறியுள்ள கருத்து இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உட்பட்ட நாட்டியக் கல்லூரி. இதில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில மகளிர் ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து, புகார் அடிப்படையில் உதவி பேராசிரியர் ஹரிபத்மனை போலீசார் கைது செய்தனர். மேலும், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைத்துள்ளதாகவும் கலாஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது குறித்து நடிகையும், கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியுமான அபிராமியிடம் பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘கடந்த 89 வருடங்களாக இயங்கும் இந்த கல்லூரியில் நாங்கள் படித்திருக்கிறோம். இதுவரை இதுபோன்ற புகார்கள் வந்ததே கிடையாது. ஆனால், இப்போது கலாஷேத்ரா என்ற பெயரை சரியாக உச்சரிக்கத் தெரியாதவர்கள் கூட அதுபற்றி தவறாக பேசுவது வருத்தமாக உள்ளது. கலாஷேத்ரா புகழை கெடுக்கும் செயல்கள் தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. எப்போதுமே ஒரு பக்கத்தை மட்டும் கேட்டு முடிவு எடுக்கக்கூடாது. அந்த ஆசிரியருக்கு என்ன நடந்தது என்று வாய் திறந்து பேசுவதற்கு கூட வாய்ப்பு கொடுக்கவில்லை. அவருக்கும் ஒரு குடும்பம் உள்ளது. எதுவாக இருந்தாலும் விஷயம் நடந்த சமயத்தில் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது பேசக்கூடாது. இப்படிதான் ஒருவர் பிரபலமான பிறகு புகார் தெரிவித்து ஹேஷ்டேக் போட்டார். இதுமுறை கிடையாது’ என பாடகி சின்மயியையும் இந்த விஷயத்தில் குறிப்பிட்டு பேசியுள்ளார் அபிராமி.
அபிராமி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளதுதான் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அஜித்துடன் அவர் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் இதுபோன்ற பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில்தான் நடித்திருப்பார் அபிராமி. அதில் அவருக்கு ஆதரவாக அஜித் பேசும் வசனங்கள் இருக்கும் வீடியோக்களை பகிர்ந்து, ’படத்தில் மட்டுமல நிஜத்திலும் இப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் நடித்ததை மீண்டும் போய் பாருங்கள்’ என ரசிகர்கள் காட்டமாகத் தெரிவித்து வருகின்றனர்.
















